ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு ‘இ-பாஸ்’பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !!
‘இ-பாஸ்’ பெற்ற வாகனங்களை மட்டுமே ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குள் அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த ஏப்ரலில் உத்தரவிடப்பட்ட நிலையில் இ-பாஸ் வழங்குவதற்கு முன்பு, வாகனங்களில் வருபவர்களிடம்,வாகனம் அடையாளம், எத்தனை பேர் ,ஒரு நாள் சுற்றுலாவா அல்லது அதற்கு மேல் தங்குபவரா என்பது போன்ற விவரங்களை பெற வேண்டும் என்றும் திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சிறப்பு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியர்களின் தரப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை ஆய்வு செய்த நீதிபதிகள், ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு, குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலா பயணியர் வந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இரண்டு ஆட்சியர்களும் அளித்த அறிக்கையில் உள்ள புள்ளி விவரங்களை பார்த்தால், அது தவறான முடிவுக்கு வழி வகுத்துவிடும் என்றனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இ-பாஸ் இல்லாமல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்குள் எந்த வாகனமும் செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இ-பாஸ் பெற்ற பின்பு தான் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை என்பது சுற்றுலா பயணியரை கட்டுப்படுத்த அல்ல. அதற்கு விண்ணப்பிக்கும்போது, அதில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள் மற்றும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இணைக்க முடியுமா என்பது குறித்து, நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.