ஏற்காட்டில் கோடை விழா அடுத்த மாதம் தொடக்கம்..
ஏற்காட்டில் கோடை விழா அடுத்த மாதம் தொடங்குகிறது. 11 நாட்கள் நடைபெறுகிறது.
Update: 2024-04-11 02:10 GMT
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோடை விழாவின் தொடக்க மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகளில் அமைச்சர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க முடியாது. இதனிடையே இந்த ஆண்டு கோடைவிழாவை அடுத்த மாதம் (மே) 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்க்கண்காட்சிக்காக எண்ணற்ற மலர்கள் ஏற்காடு பூங்காவில் பதியம் போட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக ரூ.7½ லட்சம் மதிப்பில் 5 படகுகள் புதிதாக வாங்கப்பட்டு உள்ளன. அவை ஏரிக்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதுதவிர கோடைவிழாவையொட்டி, கார் செட் மேற்கூரைகள் பழுதுபார்க்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும் படகு இ்ல்லத்தில் பழைய படகுகளை பழுதுபார்த்து வர்ணம் பூசும் பணியும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.