ஷாட்ஸ்

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்துக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு!!

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்துக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடைகால விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. எம்புரான் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி பிஜேஷுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், எம்புரான் படத்தால் எங்கேயும் வன்முறை ஏற்பட்டதா என்று பாஜக நிர்வாகிக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திரைப்படத் தணிக்கைத்துறை சான்று பெற்றிருந்தாலே அந்த படம் திரையிட தகுதி உடையதுதான் என கேரள ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு!!

கோயில் விழாக்களில் ஜாதி, சமுதாய குழு பெயர் குறிப்பிடப்படக் கூடாது என்ற அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக தமிழக அறநிலைய துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 3,400 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு!!

பாகிஸ்தானில் கராச்சியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

27 மாதங்களாக யானைகள் இறப்பு நிகழவில்லை: ரயில்வே

பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு ஏதும் நிகழவில்லை: உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது. யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 9 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. போத்தனூர், மதுக்கரை பகுதிகளில் தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறிய சென்சார் கேபிள்கள் உள்ளன என்றும் கூறியுள்ளது. தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

9 முதல் 12-ம் வகுப்பு வரையில் புதிய பாடத்திட்டம்: சி.பி.எஸ்.இ.

சி.பி.எஸ்.இ. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இந்த புதிய பாடத்திட்டம் வழங்குகிறது. ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவக் கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் வளர வாழ்த்துகிறேன்: விஜய்

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி..., ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி பூசல்... செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும் நிலையில், செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான். எந்த திட்டத்தை போட்டாலும் அதை முறியடிக்கும் வலிமை நம்மிடம் உள்ளது. நம்மிடம் இருந்து வெற்றியை பறிக்க பல எதிரிகளை உருவாக்குவார்கள்.

உதகையில் நாளை முதல் ஜூன் 5-ம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிப்பு!!

உதகையில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்தது. கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,425க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் மாற்றமின்றி ரூ.113க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என சென்னை பெரம்பூரில் நடைபெறும் ரம்ஜான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். “அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடையும் வளர்ச்சிக்கு அடித்தளமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றம், கூட்டுக்குழுவில் திமுக சார்பில் குரல் எழுப்பி வருகிறோம். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பி.தொட்டியபட்டியில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!!

அரசுப் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமூக அறிவியல் ஆசிரியர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டார்.

அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்!!

கோயில் விழாக்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது!!

 பெங்களூரிலிருந்து தனூர் வரை சென்ற சங்கமித்ரா விரைவு ரயில் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே மெதுவாகச் சென்றபோது, ரயிலிலிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரௌஷன் தாஸ் என்பவரின் செல்ஃபோனை பறித்துச் சென்றுள்ளார். பிளம்ப் ராஜேஷ் (26) என்பவரைக் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் வர்த்தக முதலீடு எனக்கூறி ரூ.8 லட்சம் மோசடி!!

 சிங்காநல்லூரில் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் பார்க்கலாம் எனக்கூறி ரூ.8.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்ணிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு மோசடி செய்த கோவாவை சேர்ந்த ராமச்சந்திரன் (37) என்பவர் கைதாகினார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை!!

திண்டிவனம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை (23) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஏழுமலையை இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற அன்பரசன்(18) குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு!!

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த சிறுமி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கிளாடிஸ் (45), 5 வயது சிறுமி வினா பலியாகினர்.

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை அறிவித்தது அயலக தமிழர் நலத்துறை!!

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. 1800 309 3793 +91 80690 09901, +91 80690 09900 14 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.