- Home
- /
- ஷாட்ஸ்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையும். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் கடந்த காலத்தில் 3684 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 613 படகுகள் சிறைபிடிப்பு. இலங்கை சிறையில் வாடும் எஞ்சிய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரூ.576 கோடிக்கு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். சேதமடைந்த படகுகளுக்கு நிதியுதவி அளித்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் தெரிவித்தார்.

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33ஆக உயர்த்த வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 35, பட்டியலினத்தவர்களுக்கு 38-ஆக உயர்த்த வேண்டும். சார் ஆய்வாளர்கள் காலிபணியிடங்களின் எண்ணிக்கையை 2000-ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

ரூ.25 கோடியில் 7 வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நெல்லை மற்றும் கடலூரில் தலா ரூ.6 கோடியில் உர தரக்கட்டுப்பாடு அமைக்கப்படும். தரமான விதைகள் கிடைக்கும் வகையில் குறு வட்ட அளவில் செயல்படும் மையங்களில் ரூ.3 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் கொள்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை ஏன் தாமதமாகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை. 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் உயிரிழந்தார்.

வரும் செப்டம்பர் மாதம் முதல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கேள்விக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

ஞானசேகரன் வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வழக்குகளை CBIக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. “ஞானசேகரன் மீதான 20க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ, சிறப்பு புலனாய்வுக்கு மாற்ற வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் ரூ.18 கோடியில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை, அண்ணா காலனியில் ரூ.15 கோடியில் மீன்இறங்குதளங்கள் அமைக்கப்படும். 200 நாட்டுப்படகு மீனவர்களுக்கு கணவாய் மீன்பிடி உபகரணங்கள் வாங்கி ரூ.40 லட்சம் மானியம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வெள்ளிமலை புனித காடுகளை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலர், ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை மரங்கள் வெள்ளிமலை புனித காடுகளில் உள்ளன என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு அமெரிக்கா 26% மட்டுமே வரி விதித்துள்ளதால் அது இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு விதித்த வரி சதவீதத்தை விட இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு குறைந்த சதவீத வரியே விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு 46 சதவீதம், இலங்கைக்கு 44%, வங்கதேசத்துக்கு 37%, சீன ஜவுளி பொருளுக்கு 54% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு வரி முழுமையாக ரத்துசெய்தால் வரி குறைப்புக்கு ஏதுவாக பேரம் பேச முடியும் என்றும் தெரிவித்தது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.896 கோடியில் அனல் மின் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி அனல்மின் நிலைய தீ விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ஆர்.வைத்திலிங்கம், ஜவாஹிருல்லா ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்தனர். தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவு 2.30 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மணிப்பூர் விவகாரம் விரிவாக விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.