டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதலாக ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டம்: அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஜி.எஸ்.டி. வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி 63வது SIAM வருடாந்திர கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், 2014க்கு பிறகு டீசல் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் துறை வளர்ந்து வருவதால் டீசல் வாகனங்கள் அதிகரிக்கக்கூடாது. டீசல் வாகனங்களுக்கு மாசு வரி என்ற பெயரில் 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து வணிக வாகனங்கள் அதாவது டிரக், கண்டெயினர் போன்ற கனரக வாகனங்கள் பொதுவாக டீசல் எரிபொருளில் இயங்குவதால், இந்த வாகனங்கள் தொடர்ந்து கூடுதல் மாசுப்பாட்டை இந்திய சுற்றுசூழலுக்கு ஏற்படுத்துகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்க நிதி அமைச்சகத்திடம் இன்று மாலை பரிந்துரை கடிதம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
டீசல் வாகனங்கள் மற்றும் டீசல் மூலம் இயங்கும் எஞ்சின்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 10 சதவீதம் கூடுதல் வரி உயர்த்தப்பட்டால் டீசலில் இயங்கும் கார்கள், வாகனங்கள், லாரிகளின் விலை உயரும் என்பது நினைவுகூரத்தக்கது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் 12 மணியளவில் எம் அண்ட் எம் நிறுவன பங்குகள் 2.38 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதமும், மாருதி சுசுகி நிறுவன பங்குகள் 0.8 சதவீதமும் சரிந்து வர்த்தகமானது.