நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீச்சு... பாஜக எம்பியால் வந்த வினை... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சிகள்!

இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினமான இன்று, புதிய நாடாளுமன்றத்திற்குள் குதித்து இருவர் கலர் புகை குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-13 13:32 GMT

புதிய நாடாளுமன்றத்திற்குள் புகை குண்டு வீச்சு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதிய நாடாளுமன்றத்திற்குள் குதித்து இருவர் கலர் புகை குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் புதிய கட்டுப்பாட்டுகள் போடப்பட்டுள்ளது. 

இன்று வழக்கம்போல் தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் 22ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அவை உறுப்பினர்கள் கூடியிருந்த போது, திடீரென பார்வையாளர் மன்றத்தில் இருந்து தடுப்புகளை மீறி அவைக்குள் இருவர் குதித்தனர். அவர்கள் கையில் இருந்த குண்டை வீசியதால் அவையில் இருந்த எம்பிக்கள் அனைவரும் அச்சமடைந்து அங்கும், இங்கும் ஓடினர். ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செய்வதறியாது திகைத்தனர். 

இருவரும் வீசிய புகைக்குண்டுகளில் இருந்து மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் புகை ஏர்பட்டது. அப்போது எம்பிகள் அனைவரும் பயந்து ஓடிய நிலையில் இருவரையும் ஒருசிலர் மடக்கி பிடித்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு உள்ளே விரைந்த காவலர்கள் இருவரையும் அழைத்து சென்றனர். இந்த களேபரத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். 

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த இந்த அசம்பாவிதம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் அவைக்கு உள்ளேயும், இருவர் நாடாளுமன்றத்திற்கு வெளியேவும் கைதாகியுள்ளனர். அதில் இரு பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட விசாரணையில் மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் பெயர் சாகர் சர்மா என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இருவரிடமும் இருந்த நாடாளுமன்ற நுழைவு சீட்டில், மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் பெயர் இருந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருவரும் பங்கேற்க பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரைத்துள்ளார். 

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் வெளியே கைதான பெண்களில் இருவர் நீலம் என்றும் மற்றொருவர் பெயர் அமோல் ஷிண்டே என்பதும் தெரிய வந்துள்ளது. இருவரும், நாடாளுமன்றத்திற்கு வெளியே “ சர்வதிகாரம் கூடாது” என கூச்சலிட்டுள்ளனர். இந்த சூழலில் எம்பி பிரதாப் சிம்ஹாவின் எப்படி இருவருக்கும் அனுமதி வழங்க பரிந்துரைத்தார் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

இதற்கிடையே நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் அவை உறுப்பினர்களின் உதவியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துளார். 

வழக்கமாக நாடாளுமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்புகளை கடந்தால் மட்டுமே ஒருவர் உள்ளே செல்ல முடியும். முதல் 3 கட்ட சோதனைக்கு பிறகே பார்வையாளர்கள் நாடாளுமன்ற அரங்கிற்கே அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு கட்ட பாதுகாப்பிலும் உள்ளே செல்வோர் உடல் முழுவதும் சோதனை செய்யப்படுவார். பார்வையாளர்கள் அரங்கில் ஒருவர் பங்கேற்க வேண்டும் என விரும்பினால் எம்பி ஒருவரின் பரிந்துரை வேண்டும்.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் தான் இருவரும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இன்று நடந்த சம்பவம் நாடாளுமன்ற பாதுகாப்பின் மீதான கேள்வியை எழுப்பியுள்ளது.

Tags:    

Similar News