மக்களவையில் தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது: ஆதரவு 454; எதிர்ப்பு 2

Update: 2023-09-21 06:10 GMT

மகளிர் இடஒதுக்கீடு மசோதா 

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகளும் பதிவானது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல்நாள் பழைய நாடாளுமன்றத்தில் அவை நடந்தது. அதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெயர்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார். 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த 33 சதவீத தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு தொகுதி வரையறை முடிவு செய்த பின்னர் இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய பா.ஜ அரசு தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா காந்தி விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து அனைத்துக்கட்சி எம்பிக்களும் மசோதா மீதான விவாதத்தில் பங்கெடுத்து பேசினார்கள். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை என்று மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்துவது காலதாமதம் செய்யப்படுவதாக கவலை தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு பதில் அளித்து பேசுகையில்,’ மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் வேண்டாம். வரும் மக்களவை தேர்தல் முடிந்த உடனே அடுத்த அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய பணிகளை மேற்கொள்ளும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறையை நடைமுறைப்படுத்தும். 2029ம் ஆண்டுக்கு பிறகு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும்’ என்று உறுதி அளித்தார். இதை தொடர்ந்து மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. எம்.பி.க்களுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

* 27 பெண் எம்பிக்கள் விவாதம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் 27 பெண் எம்.பி.க்கள் பங்கேற்று பேசினார்கள். அவர்கள் அனைவரும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் தற்போது உள்ள 543 எம்.பி.க்களில் 82 பெண் எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 27 பெண் எம்.பி.க்கள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர்.

* மாநிலங்களவையில் இன்று தாக்கல்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறி விட்டது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து விவாதம் நடைபெற்று அங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News