கோவிந்தா கோஷம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்ற அழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்

வெகு விமர்சையாக நடைபெற்ற மதுரை அழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்

Update: 2023-11-23 14:30 GMT

அழகர் கோவில் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 18ம் படி இராஜகோபுர குடமுழுக்கு நன்னீராட்டு விழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்து வருகின்றனர்... மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான திருத்தலமாகும். இதனால் இக்கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும், ஆடி மாதம் நடைபெறும் ஆடித் தேரோட்டமும் உலக புகழ்பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் 18ம் படி இராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசின் அறநிலைத்துறை முடிவு செய்து அதற்காக சுமார் 2 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்தது. 120 அடி உயரம் கொண்ட இந்த இராஜகோபுரம் 7நிலைகளைக் கொண்டது. கோபுரத்தில் உச்சியில் 6.1/2 அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் உள்ளன. இந்த இராஜகோபுரத்தின் கீழ் 18ம் படி கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சிலைவழிபாடு கிடையாது அங்குள்ள நிலை கதவுகளுக்கும், 18 படிகளுக்கும் தீபாராதனை வழிபாடு மட்டும் நடைபெறும். இதன் பழமை மாறாமல் இருக்க கடுக்காய், சுண்ணாம்பு, பணங்கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு புனரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது.இந்நிலையில் வண்ணங்கள் பூசப்பட்டு புனரமைக்கும் பணி நிறைவு பெற்று ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 23ஆம் தேதி இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் தேதி கோவில் முன்பாக உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. யாக சாலையில் தனித்தனியாக 8 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. அதனையடுத்து நவ-21 நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வாஸ்து சாந்தி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மூலவர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்த குடங்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் ஊர்வலமாக தீர்த்தக் குடங்களை யாகசாலைக்கு எடுத்து வந்தனர். யாக சாலையில் 160 தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கள்ளழகர் கோவில் சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பட்டர்கள் கலந்து கொண்டு அன்று மாலை 5 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றது. நவ-22 நேற்று காலை 2 ஆம் கால பூஜையும் மாலை 3 ஆம் கால பூஜையும் வேத மந்திரங்கள் ஒலிக்க நடைபெற்றது. 3 ஆம் நாளான இன்று காலை புண்யாகவாசனம், பூர்ணாகுதி, தீர்த்த குடங்களுக்கு தீபாராதணைகள் காட்டபட்டு 9:15 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டப யாக சாலையில் இருந்து மேலதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக 18 ம் படி இராஜகோபுரத்திற்கு எடுத்து வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க தீர்தகுடங்களில் இருந்த புனித நீரானது கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மேலூர், கள்ளந்திரி, மாங்குளம், வல்லாளபட்டி, கிடாரிபட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மேலூர், மதுரை பெரியார் பேருந்து நிலையம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
Tags:    

Similar News