களைகட்டும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான்கு முனை போட்டியால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், . நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரையிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விஜய் வசந்த் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கட்சித் தலைவர்கள் குமரி நோக்கி படையெடுக்க உள்ளனர்.
குறிப்பாக வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார். அவரது வருகை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் எழுச்சியை ஏற்படுத்தியது. தற்போது திமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை மறுநாள் 25- ம் நாங்குநேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதேபோல் அதிமுக வேட்பாளர் பசிலி யான் நசரேத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 27ஆம் தேதி நாகர்கோவிலில் நாகரா ராஜா திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவர் சீமான் குமரி மாவட்டத்திற்கு விரைவில் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சித் தலைவர்கள் வருகையால் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களை உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிர படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.