சேலத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவு
சேலம் மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள் மற்றும் 299 இதரர் என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் நாளன்று தங்கள் வாக்குப்பதிவை வாக்குச்சாவடிகளுக்கு சென்று எளிதாக வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பூத்சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட காசக்காரனூர் பகுதியில் நடைபெற்ற பூத்சிலிப் வழங்கும் பணியை தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி பார்வையிட்டுஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்கும் பணி நேற்று இரவுடன் நிறைவு பெற்றுள்ளதாக தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மயில் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.