மாட்டு வண்டிகளை, பொது ஏலம் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மதுரவாயலில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை, பொது ஏலம் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-05-20 14:18 GMT
மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்டு 69 கிராமங்கள் உள்ளன. மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரும் கிளியாறு மற்றும் சிறிய அளவிலான ஓடைகள், ஏரியில் இருந்து கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறும் கல்லாற்று படுகைகளில், மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட சில கிராமப் பகுதிகளில் போலீசாருக்கு கிடைக்கப்படும் ரகசிய தகவல் மற்றும் இரவு நேர ரோந்து செல்லும் போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள், பழைய போலீஸ் கோட்ரஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை, பல ஆண்டுகளாக வெயில் மற்றும் மழைக் காலங்களில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியை மது அருந்தும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மணல் திருட்டில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட மாட்டு வண்டிகளை, பொது ஏலம் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.