மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கான ஆய்வு

ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் பங்கேற்பு

Update: 2024-07-21 02:27 GMT
சேலம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் மழை நீர் வெளியேறாமல் பல இடங்களில் தேங்கும் நிலை ஏற்படுகிறது. அதே போன்று சாக்கடை கழிவு நீரும் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர், குருக்கல் காலனி, என்.ஜி.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரிந்து அவற்றை அகற்றி கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து 7-வது வார்டு பகுதியில் போயர் தெரு முதல் அய்யந்திருமாளிகை வரையிலும் கான்கிரீட் ரோடு அமைக்க வேண்டும், பிரகாஷ் நகர்-எழில் நகர் வரையிலும் பூங்க அமைக்க வேண்டும், வார்டுக்கு உட்பட்ட பல இடங்களில் சாலையில் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வில் துணை மேயர் சாரதாதேவி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, கவுன்சிலர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News