ஆத்தூர் : வங்கதேசத்தில் இருந்து வீடு திரும்பிய ஆத்தூர் மருத்துவ மாணவி ஜன்னிபிரியா
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் வங்கதேசத்தில் இருந்து வீடு திரும்பிய ஆத்தூர் மருத்துவ மாணவி ஜன்னிபிரியா பேட்டி
வங்கதேசத்தில் அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு, அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ரத்து செய்ய வலியுறுத்தி நடந்த மாணவர்களது போராட்டம் தீவிரமடைந்து, வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு படிப்பதற்கு சென்ற இந்தியாவை சேர்ந்தவர்கள், அவரவர் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். நேற்று, அதிகாலை, 2:00 மணியளவில், வங்கதேசத்தில் மருத்துவம் படித்து வரும், சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த, மாணவி ஜனனிப்ரியா வந்தடைந்தார். அவரை பார்த்ததும், பெற்றோர், கண்ணீருடன் அழைத்துச் சென்றனர். மருத்துவ மாணவி ஜனனிப்ரியா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான், வங்கதேசம், போக்ரா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அந்நாட்டில், இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடந்தது. மாணவர்கள் மீது தாக்குதல்; போலீசார் மீது தாக்குதல், குண்டு போடுதல் போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டது. கடந்த, 17 முதல், விடுமுறை விட்டனர். விடுதியும் பூட்டிவிட்டனர். 20ம் தேதி, எங்களை அனுப்புவதாக இருந்தனர். இரவு நேரத்தில் பயணிக்க முடியாது என்றனர். ஏழு பஸ்களில், இரண்டு போலீஸ் வாகன உதவியுடன், இந்திய எல்லைக்கு வந்தோம். எங்களது நிலை குறித்து, தமிழ் சேனல்கள் செய்தி வெளியிட்டது. கடந்த, 21ல், கொல்கத்தா வந்தடைந்தாம். 22ல், மாலை, 3:00 மணியளவில், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தோம். அங்கிருந்து, வீடுகளுக்கு செல்வதற்கு, தமிழக அரசு மூலம் கார் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். எங்களது நிலை குறித்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டறிந்தார். கலவரம் குறித்த வீடியோவை பார்த்தபோது, பதறிவிட்டோம். இந்தியர் என்று சொன்னாலே அடிக்க துவங்கினர். நீங்கள் (இந்தியர்), இங்கு வந்து படிப்பதால் தான் எங்களுக்கு பிரச்னை உள்ளது. காஷ்மீரை சேர்ந்தவரை அடித்து கொலை செய்துள்ளதாக கூறுகின்றனர். சிலருக்கு, விசா காலம் முடிந்ததால், அவசரமாக விசா பதிவு செய்து அனுப்பி வைத்தனர். கல்லுாரி திறந்ததும், அங்கு தொடர்ந்து படிப்பதற்கு, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மத்திய, மாநில அரசு, வங்கதேசத்துடன் பேசி தீர்வு காண னேண்டும். எங்களது படிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.