பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம்
போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவு
சேலம் மாநகரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம் சூரமங்கலத்தில் செயல்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் போலீசாரால் மீட்கப்பட்டு இந்த அலுவலக வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படும். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்த மொபட் ஒன்று சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதை பார்த்து அங்கு வந்த சூரமங்கலம் போலீசார் டிரைவரிடம் மொபட்டை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் ஏற்றிக்கொண்டு வருமாறு கூறியதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தான் அந்த மொபட்டை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வருமாறு கூறியது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் மொபட் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதியை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.