மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சி
விண்ணப்பிக்க 16-ந் தேதி கடைசிநாள்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை மூலம் வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திட ஏதுவாக பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 நாட்கள் இலவச பயிற்சி நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியின்போது பயிற்சி புத்தகம் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற, அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும், படித்த பழங்குடியின மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது தளம், அறை எண் 305-ல் செயல்படும் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.