ரெட்டியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்
மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு
சேலம் மாநகராட்சி ரெட்டியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். பின்னர் மருந்து, மாத்திரைகள், இருப்பு பதிவேடு, மருத்துவ பணியாளர்கள் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- ரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தரச்சான்று பெற்றுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதற்கான சேவையை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் டாக்டர்கள், நர்சுகள் தங்களது பணிகளை தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். இங்கு வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவம், பிரசவம், உள் மற்றும் வெளி நோயாளி சிகிச்சை பெறுவோருக்கு தங்களது சேவையை தடையின்றி செய்ய வேண்டும். அதோடு மட்டும் அல்லாது பருவமழை காலம் என்பதால் காய்ச்சிய குடிநீரை அருந்தவும், குளோரினேசன் குடிநீர் பருகவும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தாங்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை தவறாது மேற்கொள்ள தக்க ஆலோசனைகளை டாக்டர்கள் வழங்க வேண்டும். முதல்-அமைச்சரின் ‘மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவோருக்கு தவறாமல் மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகர நல அலுவலர் மோகன் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.