மாணவர்களுக்கு விலையில்லா பள்ளி சீருடைகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
கலெக்டர்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அரசு நடுநிலைப் பள்ளியில், 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா பள்ளி சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இன்று வழங்கினார் தமிழக அரசின் சார்பில், விலையில்லா சீருடைகள் ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் சமூக நலத்துறையின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சமூக நலத்துறையின் மூலம் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளுக்கு ஏற்றதுபோல அளவெடுத்து, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. சீருடைகள் தைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அதனை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 87 பள்ளிகள், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 127 பள்ளிகள், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 105 பள்ளிகள், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 97 பள்ளிகள் என மொத்தம் 416 அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15,326 மாணவர்கள், 15,183 மாணவிகள் என மொத்தம் 30,509 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் இன்று அரணாரை அரசு நடுநிலைப் பள்ளியில் 124 மாணவ மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) அண்ணாதுரை, பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை, மாவட்ட நமூகநல அலுவலர் (பொ) ஜெயஸ்ரீ, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.