131 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் பெண் உள்பட மூவர் கைது

குமாரபாளையத்தில் 131 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-11-24 14:46 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை அதிகம் நடப்பதாக வந்த தகவலின்படி, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், பொன்னுசாமி, ராம்குமார் உள்பட போலீசார் பலரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காவேரி நகர், புதிய காவேரி பாலம் அருகே நேற்று காலை 10:00 மணியளவில்  ரோந்து பணி மேற்கொண்டபோது, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் வந்த அபெக்ஸ் காலனியை சேர்ந்த ஜெயராமன், 60, என்பவர், மாருதி ஆல்டோ காரில் வந்த ரவீந்திரன், 34, என்பவரிடம் போதை பொருட்களான ஹான்ஸ், கூல் லிப், விமல் வி.1, விமல் வி. 2, ஆகிய 125 கிலோ பொருட்களை வாங்கி, தனது டூவீலரில் வைக்கும் போது கையும், களவுமாக பிடிபட்டார்கள். இவர்களை கைது செய்த போலீசார் பொருட்களை பறிமுதல் செய்து, ஜெயராமன், ரவீந்திரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.குமாரபாளையம் கம்பர் தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போதை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்து நேரில் சென்ற போலீசார், கடையில் போதை பொருட்கள் விற்ற சாந்தா, 44, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6.300 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இரு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News