பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புற நோயாளிகள் பிரிவில் செவிலியர்களால் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், நோயாளிகள் குறித்த தகவல்களை இணையத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் உள்ள இரத்தவங்கி, முட நீக்கியல் பிரிவு, மருந்தகம், ஆய்வகம், சித்தா, ஹோமியோபதி பிரிவுகள், குழந்தைகள் பிரிவு, சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நோயாளிகளின் பிரிவு, விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருந்து பொருட்களின் இருப்பு நிலை குறித்த பதிவேடுகளையும் ஆய்வுசெய்தார். மருத்துவமனையை தூய்மையாக பராமரித்து மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கனிவுடன் நடந்து கொண்டு தரமான உயர் சிகிச்சைகளை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, இருக்கை மருத்துவ அலுவலர் மரு.சரவணன், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் மரு.கலா, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.