பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவிற்குச் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டார். மகப்பேறு தொடர்பாக பல்வேறு பரிசோதனைகளுக்காக வருகை புரிந்த கர்ப்பிணித் தாய்மார்களிடம் மருத்து சேவைகள் முறையாக வழங்கப்படுகின்றதா என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, சமையலறை கூடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, உள் நோயாளிகளுக்கு என்னென்ன உணவு வகைகள் வழங்கப்படுகிறது, பெரியவர்கள், காச நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், இருதய நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த அட்டவணையை பார்வையிட்டார். மளிகைப் பொருட்கள் இருப்பு அறை, உணவு தயாரிக்கும் அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து உணவுகளை தரமாகவும், உணவு கூடங்களை சுகாதாரமாகவும் பராமரித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.