விழுப்புரம் அரசுக் கல்லூரியில் நாளை இறுதிக்கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
கல்லூரி முதல்வர் அறிவிப்பு
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிக்கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2024 - 25ஆம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.பி.ஏ., பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.காம். படிப்புகளுக்கு விண்ணப்பித்து தகுதி மதிப்பெண்கள் 399 முதல் 300 வரை பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.2) கலந்தாய்வு நடைபெறும்.தொடா்ந்து, பி.ஏ. வரலாறு, பொருளியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி (தகுதி மதிப்பெண்கள் 299 முதல் 250 வரை), 6-ஆம் தேதி (தகுதி மதிப்பெண்கள் 249 முதல் 195 வரை) நடைபெறும்.பி.எஸ்சி., பி.சி.ஏ. படிப்புகளுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி (தகுதி மதிப்பெண்கள் 299 முதல் 250 வரை), ஆகஸ்ட் 8-ஆம் தேதி (தகுதி மதிப்பெண்கள் 249 முதல் 195 வரை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும்.மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்வோா் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாா்பளவு புகைப்படங்கள், பெற்றோா் அல்லது பாதுகாவலரின் புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல், நகல்கள் மற்றும் உரிய சோ்க்கைக் கட்டணத்துடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.