ஜேடர்பாளையம் படுகை அனையில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு.

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் படுகை அனையில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-08-02 08:30 GMT
பரமத்திவேலூர், ஆக.2- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையம், அணைகட்டு பகுதியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சினாமூர்த்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  காவிரி நீர் பிரிப்பு பகுதிகளில் தொடர் வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக இருந்து வருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் முழுமையாக திறக்கப்பட்டு வருவதால் காவிரி கரையோர பகுதியான சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரியில் இறங்கி குளிக்கவும், புனித நீராடவும், கால்நடைகள் மேய்சலுக்கு அழைத்துச் செல்லவும், புகைப்படம் எடுப்பது, வேடிக்கை பார்ப்பது உள்ளிட்டவைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டு ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும், விளம்பர தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு இங்கிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்குவதில் ஏதாவது சிரமம் உள்ளதா, நீரேற்று நிலையத்திற்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட நீர்வளத்துறை ஆய்வின் போது மாவட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார்,பரமத்தி வேலூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

Similar News