சேலத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் குகை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் மனோரஞ்சன் (வயது 21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மனோரஞ்சன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்குவதற்கு சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மனோரஞ்சன் மின்விசிறி கொக்கியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் மனோரஞ்சன் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.