ஆஸ்திரேலிய வாலிபரை கடத்தி தாக்குதல் நடத்திய வழக்கில்

மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2024-08-07 10:28 GMT
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 29). இவர் ஆஸ்திரேலியாவில் பெற்றோருடன் வசித்து வந்தார். வெங்கடேஷ் தொழில் நிமித்தமாக சமீபத்தில் சேலம் வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னங்குறிச்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் அறிமுகம் ஆனார். அப்போது அவர், வெங்கடேசிடம் நானும், செல்வம் என்பவரும் சேர்ந்து கோவையில் 16 பிளாட் போட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் வெங்கடேஷ் விலை பேசி ரூ.1 கோடியே 30 லட்சத்தை மகேந்திரன் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அந்த தொகை அவரது வங்கி கணக்குக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே வெங்கடேஷ் தொழில் நிமித்தமாக அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் வாங்கினார். இதனிடையே மகேந்திரன் தரப்பினர் ரூ.27 லட்சத்தை திரும்ப கேட்டு வெங்கடேசை கடத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் மகேந்திரன் (53) உள்பட 9 பேரை கைது செய்தனர். மேலும் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த பிரபு (33) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த பிரபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News