பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்.
பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தாவிரமாக நடைபெற்று வருகின்றது.
பரமத்திவேலூர், ஆக.9- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டாரத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மழைநீர் வடிகால்கள் தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவின் படி சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் அறிவுரையின் பேரில் நாமக்கல் கோட்டப் பொறியாளர் குணா ஆலோசனையின் பேரில் பரமத்திவேலுார் வட்டாரத்தில் உள்ள பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் இருந்து கொமராபாளையம் செல்லும் சாலை, பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலை, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலை மற்றும் பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலைகளில் உள்ள பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர் வாரும் பணி தற்போது உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் கவின் ஆகியோர் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நாமக்கல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் வடிகால்களில் மழைநீர் தேங்குவதை தடுத்து சாலைப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.