சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது
கரு கலைந்ததால் கர்ப்பிணியாக நடித்து கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான வெண்ணிலா கடந்த 5-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அன்றைய தினமே அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. வெண்ணிலாவிற்கு உதவியாக அவருடைய தாயார் இந்திரா மற்றும் கணவர் தங்கதுரை ஆகியோர் இருந்தனர். இதனிடையே பிறந்து 5 நாட்களே ஆன வெண்ணிலாவின் ஆண் குழந்தையை நேற்று முன்தினம் 25 வயதுடைய பெண் ஒருவர் கடத்தி சென்றார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையில் அந்த பெண், குழந்தையுடன் வாழப்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது செய்ததுடன் கடத்தப்பட்ட குழந்தையையும் நேற்று அதிகாலையில் மீட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், காரிப்பட்டி நேரு நகரை சேர்ந்த அகிலன் என்பவரின் மனைவி வினோதினி (25) என்பது தெரியவந்தது.