சேலம் வளர்ச்சிக்கு அ.தி.மு.க. தான் காரணம்:எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சராக்க உழைக்க வேண்டும்

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஜி.வெங்கடாஜலம் பேச்சு

Update: 2024-08-12 08:19 GMT
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பூத் வாரியாக உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். உறுப்பினர் அட்டையே அ.தி.மு.க. அங்கீகார அட்டையாக நினைத்து கட்சி பணி செய்ய வேண்டும். அப்போதுதான், அது கட்சிக்கு பலமாக அமையும். அ.தி.மு.க.வில் சேர்ந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். சூரமங்கலம் பகுதி 1-க்கு உட்பட்ட 25, 26-வது வார்டுகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக அரியணையில் ஏற்ற நாம் அயராது பணியாற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் சேலத்துக்கு எந்தவொரு திட்டமும் கொண்டுவரப்படவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சாராக இருந்த போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடியும், தனியாக சிறப்பு நிதி ரூ.350 கோடியும் ஒதுக்கீடு செய்தார். அதனால்தான் இன்று சேலம் இவ்வளவு வளர்ச்சியை எட்டி உள்ளது. இதனை நாம் மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு நாம் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

Similar News