வேப்ப மரத்திலிருந்து வழியும் பாலை வணங்கி பூஜை செய்யும் பொதுமக்கள்
மயிலாடுதுறை அருகே வேப்பமரத்திலிருந்து வழியும் பால்- மஞ்சள், குங்குமம் பூசி பக்தி பரவசமாக்கிவரும் பொதுமக்கள்
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மேலவீதியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமாக வயலுடன் கூடிய தோப்பு உள்ளது. இப்பகுதியில் 100நாள் வேலை திட்டத்தில் பெண்கள் கன்னி வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோப்பில் உள்ள 20 அடி உயர வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்துள்ளது. இதனைப்பார்த்த பெண்கள் பக்தி பரவசத்துடன் வேப்பமரத்தினை வணங்கினர். வேப்பமரத்தில் பால் வடிவது காட்டுத்தீயாய் பரவியதை தொடர்ந்து ஏராளமான பெண்கள் குவிந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து வேப்ப மரத்திற்கு குங்குமம், மஞ்சள் பூசி பூக்களிட்டு சூடம் ஏற்றி மண்டியிட்டு வணங்கி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து வேப்பமரத்தில் நுரையுடன் பால் வடிந்து கொண்டே இருக்கும் நிகழ்வை பார்ப்பதற்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். பெண் ஒருவர் பக்தி பரவசத்தில் சாமியாடி கோயில் கட்ட வேண்டும் என்று அருள்வாக்கு சொன்னார். இது குறித்து தாவரவியலாளர்கள் கூறுகையில், தாவரத்தின் உள்பகுதியில் குழாய் போன்று உள்ள ஃப்லோயம் வழியாக சுக்கரோஸ் என்ற சத்துபொருள் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது . அதேபோன்று சைலம் என்ற திசுக்கள் வழியாக தாவரத்தில் மேல் நோக்கி செல்லும் தண்ணீர் புளோயத்தை அடைகிறது, அங்கு இருக்கும் சுக்ரோஸ் என்ற சர்க்கரை பொருளை திரவமாக்கி அதை ஃப்லோயம் வழியாக கடத்தி தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறது. இவ்வாறு செல்லும் திசுக்கள் மரப்பட்டையின் அடிப்பகுதில் உள்ளன. சில சமயங்களில் அழுத்தம் காரணமாக மரப்பட்டைகள் உடைந்து திசுக்கள் வழியாக துவாரம் ஏற்பாடு தாவரத்தின் திரவ பொருள் வெளியேறுவது ஒரு சில சமயங்களில நடைபெறும். இதையே அம்மன் அருளால் பால் கொட்டுகிறது என்ற நம்பிக்கையில் அதை வழிபடும் நிகழும் நடைபெறுகிறது. வேம்பு மரத்தையே அம்மனாக பார்க்கும் பக்தர்களுக்கு அதிலிருந்து வடியும் பாலும் அதிசயமாக தெரிகிறது