கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் இன்று ஒரு நாள் போராட்டம்

மயிலாடுதுறையில் இந்திய மருத்துவக் கழகம் மற்றும் அரசு மருத்துவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2024-08-17 03:37 GMT
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் வேண்டியும், சேவை மருத்துவர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதல்களை கண்டித்தும், மயிலாடுதுறையில் இன்று காலை 7:30 மணிக்கு, அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழக தமிழ்நாடு கிழக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார், இந்திய மருத்துவ கழக மயிலாடுதுறை கிளை செயலாளர் டாக்டர் சௌமித்யா பானு பொருளாளர் டாக்டர் அருண்குமார், சீர்காழி அரசு தலைமை மருத்துவர் அறிவழகன், மற்றும் மருத்துவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், சிவக்குமார், முத்து உட்பட 75க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மட்டும் பார்க்கப்படும் என்றும் புற நோயாளிகள் சிகிச்சை தவிர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர், மேலும் தனியார் மருத்துவமனையிலும் அவசர சிகிச்சை மட்டுமே நடைபெறும், புற நோயாளிகள் பிரிவு தவிர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். போராட்டம் நாளை காலை 6.00 மணி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளனர். இந்திய மருத்துவக் கழக தமிழ்நாடு கிளை கிழக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் வீரபாண்டியன் கூறுகையில் மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனை பாதுகாக்க பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற படுகொலைக்கு உரிய தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுகளுக்கு கோரிக்கை வைத்தார்.

Similar News