சேலத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியலுக்கு முயற்சி
போலீசார் சமரச பேச்சுவார்த்தை
சேலம் மாநகராட்சி 24-வது வார்டு லாரி மார்க்கெட்டில் இருந்து கந்தம்பட்டி பைபாஸ் செல்லும் பகுதியில் மூலப்பிள்ளையார் கோவில் அருகே பிள்ளையார் நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது பெய்து வரும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக சென்று வருவதற்கு கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனிடையே, பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை கந்தம்பட்டி செல்லும் பகுதியில் சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலையை சீரமைக்க கோரிக்கை இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலுக்கு முயன்றவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த சாலையை சீரமைத்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினர். பின்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.