திருவிடைக்கழி முருகன் கோயில் கும்பாபிஷேக பந்தல் முகூர்த்தம்
திருவிடைக்கழி பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பந்தல்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்படும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக விளங்கி வரும் இங்கு இரணியாசுரனை வதம் செய்த முருக பெருமான் சிவ பூஜை செய்து பாவ தோஷம் நீங்கிய ஸ்தலமாகவும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த ஸ்தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் கடந்த 2022ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நிறைவடைந்து கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி துலா லக்னத்தில் காலை 8:30 மணியிலிருந்து 10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்க உள்ளது. யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வெளிப்புறத்தில் 6 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளாக விநாயகர், நவகிரக மற்றும் லட்சுமி பூஜைகள் செய்யப்பட்டு பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. பூஜைகளை நந்தகுமார் குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேம்குமார் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர்.