எல்லையம்மன் கோவில் நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு எல்லையம்மன் கோவில் ஆடித்திருவிழா கோலாகலம் முந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகில் முள்குத்தியபடி வாகனங்களை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
பாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு எல்லையம்மன் கோவில் ஆடித்திருவிழா கோலாகலம். முந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகில் முள்குத்தியபடி வாகனங்களை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் ஆடித்திருவிழா கடந்த வெள்ளியன்று காப்பு கட்டலுடன் துவங்கியது.இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இதனை தொடர்ந்து இன்று காலை மலரலங்காரத்தில் ஜொலித்த எல்லையம்மனுக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதனை தொடர்ந்து திருவிழாவின் சிறப்பம்சமான பக்தர்கள் முள்குத்தும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மஞ்சளாடை அணிந்து காப்பு கட்டி விரதமிருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகில் முள் குத்தியபடி ஆட்டோ, கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை பக்தி பரவசத்துடன் இழுத்து சென்றது காண்பவர்களை பிரம்மிக்க வைக்கும் விதத்தில் அமைந்தது.மேலும் பக்தர்கள் பலர் முதுகில் முள்குத்தியபடி வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியவாறும் வாகனத்தில் கட்டில் கட்டி அதில் தொங்கியபடியும் சென்றது அனைவரையும் வியக்க வைத்தது.எல்லையம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட முள்குத்திய திருத்தேர் ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் எல்லையம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது.திருவிழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வான பக்கோர் விழா நாளை நடைபெறும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.