கோவில்பட்டியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி!
கோவில்பட்டியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கோவில்பட்டியில் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்கள் மாலை நேரத்தில் மழை பெய்தது. கடந்த 2 நாள்களாக மேக மூட்டம் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று காலை முதல் கடும் வெயில் நிலவியது. பிற்பகலில் 3 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டதுடன். 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பிரதான சாலை, புதுரோடு விலக்கு, மந்தித்தோப்பு சாலை, கிருஷ்ணன் கோயில் தெரு விலக்கு, மந்தித்தோப்பு சாலை பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கப்பாதையில் சுமாா் 3 அடிக்கு மேல் மழைநீா் தேங்கியதால், அதன் வழியாக வாகனங்கள் செல்ல போலீஸாா் தடை விதித்தனா். தொடா்ந்து இரும்பு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை மாற்று பாதைக்கு திருப்பி விட்டனா். மாலை 6 மணி அளவில் மழை ஓய்ந்து குளிா்ந்த காற்று வீசியது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.