குளத்தில் கழிவு மணலை கொட்டுவதற்கு எதிர்ப்பு!
திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் கழிவு மணலை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் மறுகால் ஓடை கடந்த 20 வருடத்திற்கு மேலாக கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் மறுகால் ஓடை நிரம்பி வெளியேறி கழிவுநீர் ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து வெள்ள தடுப்பு நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தின் மறுகால் ஓடையில் உள்ள 6 பாலங்கள் மற்றும் கரைகள் சீரமைக்கும் பணி ரூ.7 கோடி செலவில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள மறுகால் ஒடையின் கரையோரம் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஓடையில் இருந்த கழிவு மணலை அகற்றி வருகின்றனர். அகற்றப்பட்ட கழிவு மணலை நேற்று முன்தினம் நள்ளிரவு ஆவுடையார்குளத்தின் உள்ளே கொண்டு லாரிகள் மூலம் கொட்டப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், யாதவ மகா சபை தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் குளத்தில் கழிவு மணல் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ஆவுடையார்குளத்தில் கழிவுகள் கலந்த மணலை கொட்டுவதால் நீர் மாசுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது. கழிவு மணலை கொட்டுவதற்காக எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் குளத்தின் கரையை பொக்லைன் எந்திரம் கொண்டு உடைத்து உள்ளனர். எனவே கழிவு மணலை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.