கழிவு மீன் நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

கழிவு மீன் நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-08-23 04:22 GMT
பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.08.2024) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், பொட்டலூரணி விவசாயிகள் கலந்துகொண்டனர். ஏற்கெனவே, 18.07.2024 அன்று அளித்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் மனுவில், விவசாயத்திற்கு இடையூறாக இருக்கும், கழிவு மீன் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அரசு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்திப் பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இரண்டு கோரிக்கைகளில் முதல் கோரிக்கையான கழிவு மீன் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, ஆய்வு செய்யப்படுகிறது என்றும், மேற்படி நிறுவனங்கள் சுற்றுச்சூழல் துறையால் கண்காணிக்கப்படுகிறது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு நேற்று ஒரு பதில் இன்று ஒரு பதில் என்று இல்லாமல் இன்று வரை என்றும் ஒரே பதிலே அளிக்கப்பட்டுகிறது என்றும், இரண்டாவது கோரிக்கையான விவசாயிகள் உள்ளிட்டவர் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. மாறாக மனு அளித்த பிறகு விவசாயிகள் உள்ளிட்டவர்கள்மீது 26.07.24 அன்று ஒரு வழக்கும் 05.08.24 அன்று ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன பொட்டலூரணியில் காவல் துறை ஆட்சி நடக்கிறது ஜனநாயகம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம், முறையிட்டுள்ளோம் என்று பொட்டலூரணி விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியரும் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியதாக தெரிவித்தனர்.

Similar News