. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை இங்கு கட்டியதாகவும், அதனால் இவ்வூர் கோ அழையூர் என வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கொழையூர் என்று அழைக்கப்படுவதாகவும் கோவிலின் தல வரலாறு கூறுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் திருப்பணி செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மூன்று கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேக தினமான இன்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்து, விமான கலசத்தில் புனித நீர் வார்த்து, மல்லாரி இசை முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.