விஜயகாந்த் பிறந்தநாள் விழா கத்தார் நாட்டில் கொண்டாட்டம்

கத்தார் நாட்டில் தோகா நகரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

Update: 2024-08-25 16:19 GMT
கத்தார் நாட்டில் தோகா நகரில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 200-க்கு மேற்பட்டோர் இன்று ஒன்று கூடி பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். விழாவையொட்டி, மேடையில் விஜயகாந்த் பேனர் வைக்கப்பட்டு, அதற்கு சிறுவர், சிறுமியர்கள் தீபம் ஏந்தி வந்து, தமிழர்களின் விளையாட்டான சிலம்பத்தை சுழற்றியபடி வந்து விஜயகாந்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் வேடமடைந்தவர், திரைப்படங்களில் வரும் வசனங்களை பேசிக்காட்டி பார்வையாளர்களின் கரகோஷத்தை பெற்றார். மேலும் பலர் விஜயகாந்த் நடித்த திரைப்பட பாடல்களை பாடியும் வசனத்தை பேசியும் கவனம் ஈர்த்தனர். சிலர் விஜயகாந்த் குரலில் மிமிக்ரி பேசி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கலாச்சார மைய நிர்வாகிகள் பொதுச் செயலாளர் மோகன் குமார், துணை தலைவர் சுப்பிரமணியம், இந்திய சமூக நலவளக்கழக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் போபன், ராமசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விஜயகாந்தின் சாதனைகள் மற்றும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் விஜயகாந்த் நடித்த பிரபல திரைப்படங்களின் காட்சிகள் திரையிடப்பட்டன. நிறைவாக, அரங்கத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு செல்போன் டார்ச் விளக்கை மிளிர விட்டு, விஜயகாந்தின் புகழை அனைவரும் கோரசாக வெளிப்படுத்தினர். தமிழ் படங்களை தவிர்த்து மற்ற படங்களில் நடிக்காத விஜயகாந்த்க்கு நாடு கடந்து தமிழர்கள் காட்டிய அன்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தோகா நகரில் வசிக்கும் சிக்மா நிறுவன அவார்ட்ஸ் குழுமத் தலைவர் சாதிக் பாஷா ஏற்பாடு செய்திருந்தார்.

Similar News