சார்ஜாவில் கப்பலில் தீ விபத்து: தூத்துக்குடி மாலுமி பலி!
சார்ஜா கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி புதுத்தெருவைச் சேர்ந்தவர் கப்பல் மாலுமி சாரோன் (20). இவர் எம்.டி.நரசிம்மா என்ற கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா கடல் பகுதியில் இக்கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்ததாம். அப்போது, கப்பலில் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் சாரோன் ஈடுப்பட்டிருந்தாராம். அப்போது, அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சாரோன் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழந்தனராம். இதனைத் தொடர்ந்து சார்ஜா துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்தடைந்த கப்பலில் இருந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். தீ விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமி சாரோன் உடலை மீட்டுத் தர அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.