பத்திரப்பதிவு அலுவலகத்தில் தமிழக அரசின் புதிய நடைமுறை அமல்!

தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவண எழுத்தர்களை தடுக்கும் வகையில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தரின் விவரங்கள் புகைப்படத்துடன் இணைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-28 05:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவண எழுத்தர்களை தடுக்கும் வகையில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தரின் விவரங்கள் புகைப்படத்துடன் இணைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்களில் நியாயமான, நேர்மையான, அலுவலக நடைமுறைகளை பின்பற்ற, வெளி ஆட்களை பத்திர பதிவு அலுவலகத்துக்குள் அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனாலும், அந்த உத்தரவை யாரும் பின்பற்றுவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சார் பதிவாளர் அலுவலகங்களில், துறைக்கே தொடர்பு இல்லாத நபர்கள், இடைத்தரகர்கள் சிலர் பத்திர எழுத்தர்கள் என்ற பெயரில் அலுவலகப் பணிகளில் குறுக்கிடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இது குறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள் சிலர் கூறுகையில்,'சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து செல்கிறார்கள். பதிவு செய்யாத எழுத்தர்கள், சில வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் என்று கூறிக் கொண்டு ஸ்கேன் அறை வரை வந்து செல்கிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில், பதிவு அலுவலர்களால், பதிவு செய்யப்பட்ட எழுத்தர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காகவும், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை அடையாளம் காண்பதில் உறுதுணையாகவும் இருக்கும் வண்ணம், அனைத்து பதிவு அலுவலகங்களிலும் அவ்வலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவண எழுத்தர்களின் பெயர், உரிம எண், கைப்பேசி எண் அடங்கிய விவரங்களை ஆவண புகைப்படத்துடன் இணைத்து பொது மக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகையில் தெரிவித்திட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவண எழுத்தர்களை தடுக்கும் வகையில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர் பெயர், உரிம எண், கைப்பேசி எண் அடங்கிய விவரங்கள் ஆவண எழுத்தர்களின் புகைப்படத்துடன் அறிவிப்பு பலகையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News