தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு சார்பில் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு சார்பில் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு(2024-2025), தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு தலைவர் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் துறை சார்ந்த மாவட்ட உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு உறுப்பினர்கள் இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் (எ) ஜான் எபினேசர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, சிதம்பரம் சட்டமன்றமஉறுப்பினர் பாண்டியன் மற்றும் இணைச் செயலாளர்(பதிப்பாளர்) பூபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு தலைவர் டாக்டர் இலட்சுமணன் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் தொடர்பாக துறைகளின் ஆண்டறிக்கையை உரிய நேரத்தில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு 2 நாட்கள் ஆய்வுப் பயணமாக இன்று வருகை தந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மீனவர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், இயங்கும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் உமாதேவி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் சுப்பிரமணி, சென்னை தாட்கோ தலைமை அலுவலக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர்(பொ) ரமேஷ், கூடுதல் இயக்குநர்(மீனவ நலவாரியம், சென்னை) அனிசெல்வசோனியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) இராஜா, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் பிரபாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.