சேதுபாவாசத்திரம் வட்டார ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
வேளாண்மை
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம், வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜி.சாந்தி., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் குருவிக்கரம்பை, பூக்கொல்லை, பள்ளத்தூர், சேதுபாவாசத்திரம், செந்தலைவயல், பெருமகளூர் ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி.சாந்தி பேசுகையில், "நெற் பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கான தொழில் நுட்பங்கள் பற்றியும், விதை தேர்வு, விதை நேர்த்தி, நீர் மேலாண்மை, மண் பரிசோதனையின் மூலம் உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பருவத்தில் பயிர் செய்தல் குறித்த தொழில் நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் பேசுகையில், இலை வண்ண அட்டை கொண்டு உரமிடுதல், நெற்பயிரில் முட்டை ஒட்டுண்ணிகளை கொண்டு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.