மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை

Update: 2024-12-26 11:54 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில்,தற்போது கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறையால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனா். கடற்கரை கோயில், ஐந்தரதம், அா்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. கடற்கரையில் தங்கள் குழந்தைகளுடன் குவிந்த பயணிகளில் பலா் அலையின் அழகை கண்டுரசித்து கடலில் குளித்து மகிழ்ந்தனா். அப்போது கடற்கரை பகுதியில் ரோந்து வந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், எஸ்.ஐ திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீஸாா் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது கடலில் குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை கரைக்கு திரும்புமாறும் அழைத்து அறிவுரை கூறினா். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதனால் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சுற்றுலா பயணிகள் பலா் காத்திருந்து கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்துவிட்டு வீடு திரும்பினா்.

Similar News