பெரியகொழப்பலூர் பனையம்மன் கோயிலில் தேர் திருவிழா. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
ஆரணி, ஆக 28. சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்பலூர் கிராம தேவதையாக விளங்கும் அருள்மிகு பனையம்மன் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சேத்துப்பட்டு அடுத்த பெரியகொழப்பலூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கிராம தேவதையாக விளங்கும் அருள்மிகு பனையம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்மன்களுக்கு பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6ம் தேதி கோயில் வளாகத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை உடன், பூங்கரக ஊர்வலம் நடந்தது. 13ம் தேதி கோயில் வளாகத்தில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. இரவு நேரத்தில் மகாராணி, திரிபுரசுந்தரி, சரஸ்வதி, தவநிலை நாயகி, மகாலட்சுமி, அன்னபூரணி, மகிடா சூரமர்த்தினி ஆகிய வேடங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடந்தது. 27ம் தேதி கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் புதன்கிழமை பனையம்மன் கோயில் தேரோட்ட திருவிழா நடந்தது. அப்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பனை அம்மனை மரத்தேரில் அமர்த்தி தேர் சக்கரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்ட திருவிழா தொடங்கியது. இதில் பெரியகொழப்பலூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பின்னர் தேர் நிலையை வந்து அடைந்ததும் அம்மன் பக்தர்கள் முதுகில் கொக்கி அணிந்து அந்தரத்தில் பறந்து வந்தபடி அம்மனுக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை பெரியகொழப்பலூர் பனையம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் அறங்காவலர்கள், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.