சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு திரும்ப பெற வேண்டும் -நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய சாலை பராமரிப்பு இல்லாமலும், காலவதியான சுங்கசாவடிகளை அகற்றாமலும் வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு சுங்க கட்டண வசூலில் மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமும் ஈடுபட்டு வருகிறது லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 17 சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்கிறது. தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பல சுங்கச்சாவடிகளில் லோக்சபா தேர்தலுக்கு பின், ஜூன் 3ம் தேதி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னசமுத்திரம், எலியார்பதி, கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், ஓமலுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், விக்கிரவாண்டி ஆகியவை கட்டணம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடிகள். இங்கு, 5 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால், வாகனங்களின் டயர்களுக்கு தகுந்தபடி, 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. இதை கண்டித்தும் திரும்பபெற வேண்டுகோள் விடுத்தும் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. வருகின்ற செப்டம்பர் 1 முதல் பெரும்பாலான சுங்கசாவடிகளில் கட்டண உயர்வு செய்யப்படும் என அறிவிப்பு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய சாலை பராமரிப்பு இல்லாமலும், காலவதியான சுங்கசாவடிகளை அகற்றாமலும் வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு சுங்க கட்டண வசூலில் மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. தொழிற்துறையினர் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுவரும் சங்க பிரதிநிகள் ஆகியோரை கலந்து ஆலோசிக்காமல் வருடந்தோறும் கட்டண உயர்வு செய்வது கண்டனத்துக்குரியது. எனவே, போக்குவரத்து தொழிலில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சுங்க கட்டண உயர்வால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு மத்திய அரசும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமும் அறிவித்துள்ள சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.