ராசிபுரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..
ராசிபுரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..
ராசிபுரம் நகராட்சி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் பொது மக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதையும், இடையூறாக வைக்கப்படும் கடைளை அகற்றக்கோரியும் நகராட்சி ஆணையரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த தெருவின் நுழைவு பகுதியில், 4 அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தில் இந்தியன் வங்கி, கோகுலம் சிட்ஸ், SRV லாட்ஜ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், வேலவன் மெடிக்கல், இந்தியன் வங்கி ATM மற்றும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு விடப்பட்ட அடித்தளம் வாடகைக்கும் விடப்பட்டுள்ளது. இதனால், இந்த வணிக வளாகத்திற்கு வருபவர்கள், வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். சிலர், இருசக்கர வாகனங்களை நாள் முழுவதும் நிறுத்திவிட்டு சேலம், நாமக்கல் போன்ற பகுதிக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். அதேபோல், இரவில் தெருவின் நுழைவு வாயிலில் தள்ளுவண்டி போடுகின்றனர். மேலும் மர்ம நபர்கள் தெருவில் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். அவ்வபோது அவர்கள் ரகளையிலும் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனால், பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. அவசர தேவைக்கு வரும் 108 ஆம்புலன்சு மற்றும் கேஸ் கொண்டு வரும் வாகனம், குப்பை வண்டி போன்றவை கூட தெருவின் உள்ளே வருவதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இடையூராக உள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் நகராட்சி தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், நகராட்சி ஆணையாளர், கணேசன் , மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் இடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அவர்களிடமும், தொடர்ந்து ராசிபுரம் காவல் ஆய்வாளர் பொறுப்பு சுகவனம் அவர்களிடமும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் இடமும் கோரிக்கை மனுவை அளித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் இப்பகுதிகளில் வந்து கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது எனவும் இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.