கோயில் குண்டம்
தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் பலநூறு ஆண்டுகள் பழமையான தான்தோன்றியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கோயில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 11ம் தேதி கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 23 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 25 ம் தேதி மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று இரவு பக்தர்கள் காணிக்கையாக வழங்கி இருந்த 10 டன் விறகுகளை கொண்டு குண்டம் திறப்பு நடைபெற்றது. விடிய விடிய விறகுகள் எரிக்கப்பட்டு குண்டம் தயார் செய்யப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதிகாலை கோயில் பூசாரிகள் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கோயிலில் நந்தா தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் தலைமை பூசாரி ராஜகோபால், குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்தார் பின்னர் தலைமை பூசாரி ராஜகோபால் முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து வரிசையாக கோயில் பூசாரிகளும், அதைத்தொடர்ந்து 14 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த ஆண், பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கையில் குழந்தையுடனும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.குண்டம் திருவிழாவில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது சுற்றி இருந்த பக்தர்கள் அவர்களை கை தட்டி உற்சாகப்படுத்தினர்.