கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவராகவன் (52). இவரது மனைவி ரேவதி. இவர் கிளிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந் நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஊராட்சி சார்பில் அகற்றப்பட்டது. அதில் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் (33), என்பவரின் படிக்கட்டு அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், ஊராட்சி மன்ற தலைவி ரேவதி, அவரது கணவர் பூவராகவன், ஊராட்சி செயலாளர் தங்கதுரை ஆகியோரை அசிங்கமாக திட்டி அரசு பணியை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் ஊராட்சி மன்ற தலைவியை நெட்டித்தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூவராகவன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவியை தாக்கிய தர்மராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.