துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு விசாரணைக்கு உகந்தது அல்ல!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு விசாரணைக்கு உகந்தது அல்ல!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மீது குற்றவியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும், பாதி்க்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையை ஏற்ற தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் இழப்பீடு போதுமானது என்றும் கூறி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம்பெண் ஸ்னோலின் என்பவரின் தாயார் வனிதா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அரசு யார், யாருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை' என வாதிடப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால், தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், ‘இதுகுறித்து அரசு கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.