ஸ்ரீவைகுண்டம் அணை மதகுகளை சீரமைக்கும் பணி தொடங்கியது!
மழை வெள்ளத்தால் சேதமடைந்த ஸ்ரீவைகுண்டம் அணையின் மதகுகளை சீரமைக்கும் பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக ஸ்ரீவைகுண்டம் அணை உள்ளது. இந்த அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால் மூலம் விவசாயத்திற்கு பாசன வசதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கும், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கும் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது பாசன குளங்கள் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மழைக்காலத்திற்கு முன்பாக சேதமடைந்த குளங்களையும், மதகுகளையும் சீரமைக்கும் பணி நிர்வாகிகள் சார்பில் நடைபெற்றது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.