கிராமத்தை மீட்டுத் தர வலியுறுத்தி காங்கேயம் அருகே பொதுமக்கள் போராட்டம்
காங்கேயம் அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தங்களது கிராமத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, வட்டமலை பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம் அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தங்களது கிராமத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, வட்டமலை பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: காங்கேயம் தாலுகா, குண்டடம் ஒன்றியம், வட்டமலை கிராமம் அருகே தாராபுரம் சாலையில் வடக்குப் புதுப்பாளையம் கிராமம் இருந்தது. இதில் அரசு கொடுத்த இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தில், சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி, குடியிருந்து வந்தோம். இந்தக் குடியிருப்பு பகுதிக்கு அரசால் வழங்கப்பட்ட தெரு மின் விளக்கு, மயானம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் குடியிருந்து வந்தோம். இதையடுத்து மேற்கண்ட கிராமப் பகுதியில் தனி நபர்கள் சிலர், எங்களுக்கு புதுவீடு கட்டித் தருவதாகக் கூறி, எங்களது மனை பட்டாக்களை வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டு, இங்கிருந்த வீடுகள், பொதுக் கழிப்பிடம், மயானம் ஆகியவற்றை இடித்து, தரை மட்டமாக்கி விட்டனர். தற்போது நாங்கள் காங்கேயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே ஆக்கிரமிப்பில் இருக்கும் எங்களது நிலத்தை மீட்டு, மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். பின்னர், இது தொடர்பாக காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு, கலைந்து சென்றனர்.